தமிழகத்தில், பயணி பேருந்துகள், ஒப்பந்த வாகனங்கள், சரக்கு வாகனங்கள் என, 10.48 லட்சம் போக்குவரத்து வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற, மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989, எட்டாவது விதியின் படி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இருப்பினும், படிப்பறிவு அற்றவர் பலர் ஓட்டுனர் பணியில் இருப்பதாகவும், அவர்கள் உரிமம் பெறுவதில் சிக்கல் இருப்பதால், ஓட்டுனர் பற்றாக்குறை நீடிப்பதாக வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு தரைவழிப் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் சுகுமார் கூறியதாவது: தமிழகத்தில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர், ஓட்டுனர் உரிமம் பெற கல்வி தகுதியில்லாமல் தவிக்கின்றனர். இதனால், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் உதவியாளராக வேலை செய்து வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மேலும், பலர் கல்வித் தகுதி உள்ளதாக போலியான சான்றிதழ்களை வழங்கி, பிடிப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு, ஓட்டுனர் உரிமம் பெற, கல்வித் தகுதிக்கு இணையாக மாற்று ஏற்பாடு செய்யப்படும்' என, கூறினர். அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஓட்டுனர் உரிமம் பெற, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது,
மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ளது. இந்த விதியை தளர்த்த வேண்டும் என, கடந்தாண்டு மத்திய அரசை, தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதற்கு, மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காத நிலையில், எட்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு இணையாக, மாற்று ஏற்பாடு செய்யும் முறைக்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக, போக்குவரத்து துறை அதிகாரிகள், கல்வி துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தனர். அதன்படி, தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களுக்கு பயற்சி வகுப்பு நடத்தி, அதைத் தொடர்ந்து, தேர்வு ஒன்று நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவரின் கல்வி தகுதி, எட்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு இணையாக எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த தகுதியை, ஓட்டுனர் உரிமம் பெற மட்டும் பயன்படுத்த முடியும். கல்வி துறையில் இருந்து, செயல் திட்டம் வந்தவுடன், இது தொடர்பாக மத்திய அரசிடம், மாநில அரசு மீண்டும் தொடர்பு கொண்டு தீர்வு காண முயற்சிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்

No comments:
Post a Comment